புதன், 30 ஜனவரி, 2013

கோப்பையிலே ஒரு புயல்…


printed_paper_cups_off_main
சுடச் சுட காபி விநியோகிக்கும் இயந்திரங்களை பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உற்சாகத்துக்காகத் தங்கள் அலுவலகத்திலேயே நிறுவியுள்ளன. காபியின் பயணம் அந்த இயந்திரத்தில் தொடங்கி நம் உதடுகளில் முடிகிறது என்றால் அது பயணிக்கின்ற பேருந்தாக அதனை ஏந்துகின்ற கோப்பையைச் சொல்லலாம். இரண்டாயிரம் பேர் பணிபுரியக் கூடிய ஒரு நிறுவனத்தில் இந்த காபிக் கோப்பைகளின் பயண்பாடு என்பது மலைக்கவைக்கும் விஷயமாக இருக்கிறது!
ஒவ்வொரு ஊழியரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி அல்லது தேநீர் அருந்தினால் கூட ஒரு நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோப்பைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பெருநகரத்திலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருக்கிற நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாலும், காபி இயந்திரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கக் கூடிய அடிப்படை ஊழியர் வசதிச் சாதனம் என்பதாலும் இந்த விஷயம் அதி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. ஒரு லட்சம் கோப்பைகளுக்கும் மேல் பயண்படுத்தப்படும்போது அவற்றின் வெளியேற்றம் மற்றும் மறுசுழற்சி குறித்தும் கவலையுடன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காகிதக் கோப்பையின் உற்பத்தி என்பது பல சுற்றுக்களைக் கொண்டது. அவற்றைப் படிப்படியாகக் கீழே தந்துள்ளேன்…
  1. மரம் வெட்டப்படுவது…
  2. வெட்டப்பட்ட மரங்கள் சில்லு சில்லாக சீவப்படுவது…
  3. சீவப்பட்ட துகள்கள், வேதிக்கலவைகளில் ஊறவைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவது…
  4. பதப்படுத்தப்பட்ட கலவை காகிதக் கூழாக மாற்றப் படுவது…
  5. காகிதக் கூழில் வென்மை நிறம் கூட்ட ப்ளீச்சிங் சோடா சேர்க்கப்படுவது…
  6. பின்னர் அந்தக் காகிதக் கூழ் காகிதமாக்கப்படுவது…
  7. காகிதத்தின் ஒரு புறத்தில் திரவம் ஊறாத அளவுக்கு பாலிதீன் ஒட்டப் படுவது…
  8. பின்னர் அந்தக் காகிதம் கோப்பையாக வடிவமைக்கப்படுவது…
ஒவ்வொரு காகிதக் கோப்பையும் குறைந்தபட்சம் இத்தகைய எட்டு படிநிலைகளைக் கடந்தே (கோப்பையின் மேற்புறம் அச்சிடுவது, அந்தக் கோப்பைகள் பாலிதீன் உறைகளில் அடுக்கப்படுவது உள்ளிட்ட சில்லறை வேலைகளை இதனுடன் சேர்க்கவில்லை) நமது கைகளுக்கு வருகிறது. இந்த ஒவ்வொரு படிநிலையிலும், மின்சாரமும் கணிசமான அளவுக்குப் பயண்படுத்தப்படுகிறது.
இந்தக் கோப்பைகளைப் பயண்படுத்தும் முன் மரங்கள் வெட்டப்படுவது, கோப்பைகளில் பயண்படுத்தும் பாலிதீனின் மறுசுழற்சிக் காலம் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மறுசுழற்சியற்ற அல்லது குறைவாக இருக்கக் கூடிய இதன் தீமைகளிலிருந்து விடுபட மிக எளிமையான ஒரு வழியிருக்கிறது.
Coffee-Mugs-in-Solid-Colors-Zibo-Modern
மறுசுழற்சிப் பயண்பாடுள்ள பீங்கான் மற்றும் உலோகக் கோப்பைகளைப் பயண்படுத்துவதே அந்தத் தீர்வு. பீங்கான் கோப்பைகளைப் பொறுத்தவரை பதினைந்து ரூபாய் விலையில் தொடங்கி, ஆயிரக் கணக்கான ரூபாய் விலையுள்ளவை வரை பலதரப்பட்ட கோப்பைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வன்னங்களில், அல்லது தங்களுக்கு விருப்பமான சித்திரங்கள் வரையப்பட்ட அல்லது தாங்களே வரைந்த கோப்பைகளில் காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தலாம். நிறுவன மேலிடத்தில் செல்வாக்குள்ள பதிவர்கள் (அட நான் அவரச் சொல்லலப்பா) யாராவது இருந்தால் அத்தகைய கோப்பைகளை நிறுவனத்தையே ஸ்பான்சர் செய்யப் பரிந்துரைக்கலாம். அப்படி யாரேனும் பரிந்துரைத்தால் அதுவே இந்தப் பதிவு எழுதிய நோக்கம் நிறைவேறியதற்கான சான்றாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முக்கியமான பின் குறிப்பு: ஒவ்வொரு முறை காபி அருந்தும் போதும் சிரமம் பார்க்காமல் கோப்பையைக் கழுவவும்… ஒவ்வொரு முறை கோப்பையைக் கழுவும்போதும், கடைசியாக எப்போது பல்துலக்கினோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும். முன்னது உங்களுக்கு நல்லது, பின்னது மற்றவர்களுக்கு நல்லது.